வட இந்திய பயணம்-1

எங்காவது நீண்ட தூரம் பயணிக்கவேண்டும், இந்திய நிலபரப்பை அலைந்து திரிந்து தரிசிக்க வேண்டும், பரந்து விரிந்த கங்கை சமவெளியை காணவேண்டும் இந்த எண்ணங்களெல்லாம் என் நெஞ்சில் பிறந்து மடிந்து கொண்டே இருக்கும், அப்படி ஒரு நாள் இந்த எண்ணங்கள் பிறக்கும்போது கிடைத்த புத்தகம்தான் டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தர்மமும், அந்த புத்தகம் பௌத்தம் சார்ந்த கொள்கைகளை அறிமுகம் செய்தது ராகுல் சங்க்ரித்யாயனின் பௌத்தம் தொடர்பான கட்டுரைகள் இன்னும் ஆழமாக பௌத்தத்தை சொல்லிக்கொடுத்தன.சரி புத்தர் முதன் முதலில் போதித்த இடமான சாரநாத் செல்லலாம் என்று முடிவு எடுத்தேன்

சாரநாத் செல்ல வாரணாசி செல்ல வேண்டும், அப்படித்தான் வாரணாசி பயணம் தொடங்கியது, வாரணாசி என்னும் பழைய நகரம் மதுரை போல நீண்ட பயணம் பயணிக்கும் நகரம், காசி, பன்னாரஸ் என்று வரலாற்றில் அழைக்கப்பட்டு கங்கையின் மடியில் பரந்து கிடக்கும் வரலாற்றின் சாட்சி

கொள்கைரீதியில் வாரணாசியும் சாரநாத்தும் எதிர் எதிர் துருவங்கள். முதலில் வாரணாசியை புரிந்து கொண்டால்தான் சாரநாத்தை புரிந்து கொள்ள முடியும். கி.மு ஆறாம் நூற்றாண்டில் இந்திய நிலபரப்பில் அறுபதுக்கும் மேற்பட்ட கடவுள் மதம் சார்ந்த தத்துவங்கள் இருந்தன, சில தத்துவங்கள் வருணாசிரம சாதிய தத்துவத்தை மறுத்தன, சில ஆன்மா,மறுபிறப்பு போன்றவற்றை மறுத்தன,சில சாதியத்தை மறுத்து ஆன்மா,மறுபிறப்பை ஏற்றுக்கொண்டன. வருணாசிரம சாதிய,ஆன்மா, மறுபிறப்பு போன்றவற்றை ஆதரிக்கும் பார்ப்பனீயம், சாதியம்,ஆன்மா, மறுபிறப்பு போன்றவற்றை கடுமையாக எதிர்க்கும் பௌத்தம்(நவாயன பௌத்தம்), சாதியத்தை எதிர்த்து ஆன்மா, மறுபிறப்பு போன்றவற்றை ஆதரிக்கும் சமணம் போன்ற சில தத்துவங்கள்தான் இரண்டாயிரம் வருடம் கடந்தும் பயணிக்கின்றன இதுதான்.பார்ப்பனீயத்தின் வாரணாசியும் பௌத்தத்தின் சாரநாத்தும் வரலாற்றில் முரணான நகரங்கள்

இந்த மூன்று தத்துவங்களும் பிறந்து வளர்ந்த கங்கை சமவெளியின் இன்றைய சமுக,பொருளாதார,அரசியல் நிலைமையை நேரில் காண விரும்பினேன், அன்று இரவே ஒரு குருட்டு நம்பிக்கையில் சென்னை முதல் வாரணாசிக்கு விமானம் முன்பதிவு செய்தேன், முன்பதிவு செய்துவிட்ட பிறகுதான் தெரியாத மொழி, சீதோசன நிலை என்று எனக்குள்ளே பயம் கூட ஆரம்பித்தது, மறுபுறம் தேடல் வாரணாசி,சாரநாத்,பௌத்தம்,பார்ப்பனீயம்,உத்தர பிரதேஷ் அரசியல்,பொருளாதாரம்,வரலாறு என தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன்,ஒரு பகுதிக்கு போகும்முன் முடிந்த அளவு அந்த இடத்தை பற்றி தகவல் திரட்டிவிட்டால் அந்த இடத்தில் பயணிக்கும்போது அந்த இடத்தை இன்னும் ஆழமாக கவனிக்க முடியும்.

நாள் நெருங்க நெருங்க பயமும், தேடலும் ஒற்றை புள்ளியில் சந்தித்தன விளைவு காய்ச்சலே வந்துவிட்டது.பயத்தை விடலாமா பயணத்தை விடலாமா, கங்கை சமவெளியை பார்க்க வேண்டுமா வேண்டாமா? ஆமாம் பார்க்க வேண்டும்.அப்போ பயத்தை விட்டு கிளம்பு, கால்களை சிறைப்பிடிக்காதே என்று என் மனம் முதல் முறையாக தெளிவாக பேசியது

img_20190111_161355

இதோ கிளம்பிவிட்டேன் விமான நிலையம், முதல் முறை விமானப்பயணம். இதோ என் முன்னே விமானம். பெரிய சிறகுகள், மாபெரும் பறவை என் முன்னே சிலிப்பிக்கொண்டு நிற்கிறது. சிறுவயதில் வயலில் நீர் பாய்ச்சிகொண்டிருப்பேன், மேலே விமானம் பறக்கும், என்னை மறந்து என் கையிலிருக்கும் மண்வெட்டியை மெய் மறந்து கீழே போட்டுவிட்டு விமானத்தையே பார்த்துக்கொண்டிருப்பேன், அந்த பறவை என் முன்னே நிற்கிறது. இதோ இன்னும் சற்று நேரத்தில் அந்த பறவையின் மேனியில் நானும் ஒரு அங்கமாக போகிறேன். ஏதோ ஒரு கிராமத்து பையன் நான் பார்த்ததை போல அண்ணாந்து பார்ப்பான் அவனுக்கு காற்றில் அன்பு முத்தங்களை அனுப்பப் போகிறேன்

எனது தந்தை சிறுவயதில் ஒரு பரிசு கொடுத்தார் அது ஒரு சிறிய விமான பொம்மை அந்த விமான பொம்மை ஒடத்தொடங்குமுன் தனது கதவுகளை திறக்கும், ஆட்கள் ஏறிவிட்டார்கள் என்று அர்த்தம் பிறகு, ஒரு மீட்டர் உயரம் பறக்கும் மீண்டும் தரையிறங்கும், மறுபடியும் கதவை திறக்கும் ஆட்கள் இறங்கிவிட்டதாக அர்த்தம் அந்த பொம்மை என்னுள் ஏற்படுத்திய ஆச்சரியத்தின் அளவு மிகப்பெரியது, என் கனவுகளில் வரும் இதோ என் முன்னே உண்மையான விமானமே நிற்கிறது.எந்தப் பொருளும் தூரத்திலிருந்து பார்க்கும்போதுதான் ஆச்சர்யம் நெருங்க நெருங்க புரிதல் வியப்பை நீர்த்துப்போகவைத்து விடுகிறது

விமானத்தில் ஏறி அமர்ந்தேன், அமைதியான பறவையைப் போல மெதுவாக ஓட்டப்பாதையில் ஓடியது,போக போக வெறிப்பிடித்தது போல ஓடி மிகப்பெரிய கூச்சலோடு தரையை விட்டு தாவி மேலே பறந்தது, இதோ பறக்கிறேன், இதோ சென்னை பெட்டி பெட்டியை பரவி கிடக்கிறது, அதோ வேலை தேடி அலைந்த திருவான்மியூர் ஐ.டி பூங்கா , அதோ கடற்கரை சென்னையின் உருவம்தான் என்ன? ஒரு உயரம் வரை சென்னை என்பது பெட்டிகளின் தொகுப்பு, அதற்குமேலே? ஒரு புள்ளி. சரி, அதற்கு மேலே? பிறகு ஒன்றுமேயில்லை.அந்த ஒன்றுமில்லாததில்தான் சக்கரமாய் ஓடிகொண்டிருக்கிறோம்

இதோ விமானம் 870km/hr வேகத்தில் பறக்கிறது, இதோ 11.3km உயரத்தில் பறக்கிறேன்.இப்போது என் கண்முன்னே தெரிவதெல்லாம் நீலப்பாலைவனம் வேறு எதுவுமில்லை எங்கும் நீலம். இதோ எனது இடப்பக்கம் சூரியன் மறைகிறான் தங்கம் ஜொலிப்பது போல அந்த திசையே ஜொலிக்கிறது, அதோ எங்கள் மேட்டுகாட்டு பஞ்சு போல மேகங்கள் முடிச்சி முடிச்சாய் நீல வெளியில் சிதறிக்கிடக்கிறதே யார் சிதறியது.வானம் என்பது மாய உலகமா? நிமிடம் நிமிடம் காட்சி மாறுகிறதே

அதோ கடல் எல்லையற்று விரிந்து கிடக்கிறது, ஆழி சூழ் உலகே ஐ லவ் யூ”. இந்த ஆழியில் எப்படி மீனவன் கட்டுமரத்தில் கடக்கிறான்,மீனவனின் மனவுறுதி மகத்தானதுதான். இந்த ஆழியின் வயிற்றில் எத்தனை நகரங்களோ,உயிர்களோ, அதோ இராட்சச கப்பலெல்லாம் அளக்கமுடியா நுண்ணிய புள்ளிகளாய் ஆழிக்கு அடங்கிப்போன மாயமென்ன

இதோ மேகங்கள் விலகி நீண்ட நீலவெளிப்பயணம். தூரத்தில் ஏதோ தெரிகிறது கொஞ்சம் நெருங்கினேன், வெள்ளித்திரை கொஞ்சம் விலகியது அது என்ன வளமான நஞ்சை நிலங்களா? இல்லை இல்லை இன்னும் நெருங்கினேன் அது என்ன? வெள்ளை ஆவின் மந்தைகளா? இல்லை இல்லை வெண்புரவி கூட்டமோ?, இல்லை இல்லை அவைகள்தான் நீலவனச்சோலையின் வெண்மேகக்கூடங்கள்

இதோ இருள் உலகை கவ்விவிட்டது, ஆங்காங்கே ஒளித்தொகுப்பாய் நகரங்கள் தெரிகின்றன, நகரத்திற்கென்று ஒரு வடிவம் இல்லையா? தனக்கு தோன்றும் திசைகளிலெல்லாம் தன் ஆக்டோபஸ் கைகளால் கிராமங்களை விழுங்குகிறதே. வாரணாசிக்கு மேலே விமானம் வந்துவிட்டது, அதோ வாரணாசியின் நரம்புகளாய் சாலைகள் நீண்டு ஜொலிக்கின்றன, அதோ இருளுக்குள் மறைந்து கிடக்கும் பிரமாண்டம், கங்கை.கங்கை பாலம் மட்டும் ஆங்காரத்தில் ஜொலிக்கின்றதே தலையிருக்க வால் ஆடலாமா?. இதோ இந்தியாவின் இருபத்தி ஐந்து சதவித மக்கள் தொகை கொண்ட ஜனக்கடலில் ஐக்கியமாகப்போகிறேன்

Advertisements

பொட்டல் காடு

சுட்டெரிக்கும் வெயில் தாயும் மகனும் பசுமாட்டை ஒட்டிக்கொண்டு தார்ச்சாலையில் நடந்து வருகின்றனர்

அம்மா நாளைக்கு எனக்கு காலேஜ் தொடங்குது, கெவர்மென்ட் காலேஜ்லயே சீட்டு கிடைச்சிருச்சி, காலேஜ் கோயம்புத்தூர்ல இருக்குது. நம்ம ஊரு தன்னிபள்ளத்ல இருந்து திருச்சிபோய் அங்கறந்து கோயம்புத்தூர் போவனும், பஸ் காசு மத்த செலவுலாம் சேத்து ஒரு ஆயிரம் ரூபாயாது வேணும்மாஎன்றான் கலையரசன்

எய்யா கலையரசு நீ விடிய விடிய படிச்சதுக்கு பலன் கிடைக்குது. நம்ம ஊரு சாதி சனத்லே நீதான்யா இந்த படிப்புலாம் படிக்க போற, கவனமா படி, நாலு காசு நிழல்ல உக்காந்தி சம்பாரியா.உன் ஆத்தா மாதிரி வெயில்லயும் மழைலயும் வத்தலா காயிர நாயி பொழப்பு வேணாம்யா.போன வாரம் அஞ்சி நாள் கூலி வாங்காம பாக்கி இருக்கு, கீராம்பூர் தம்புகிட்ட வாங்கிட்டு வந்தரேன்,நீ இந்த மாட்ட ஓட்டிகிட்டு வீட்டுக்கு போயா” என்றாள் தாய்

தாயிடம் சொல்லிவிட்டு இரவு கிளம்பி அதிகாலையில் கோயம்புத்தூர் கல்லூரி சென்று சேர்ந்தான் கலையரசு.

முதல் நாள் கல்லூரி வகுப்பு தொடங்கியது

கொஞ்சம் தள்ளி உட்காருங்க ஜி, ஆமா உங்க பேரு என்ன? என் பேரு உக்கிரப்பாண்டி, இராமநாதபுரம்.இராமேஸ்வரம் கேள்விப்பட்ருக்கிகளா? அங்கிருந்து வரேன்.”

என் பேரு கலையரசன்.நான் திருச்சி பக்கத்ல ஒரு கிராமம் ஜி

இப்படி அறிமுகமான நட்பு நாட்கள் செல்ல செல்ல உறுதியானது.ஒரே ரூம், ஒரு தட்டுல சாப்பாடு என கூடப்பிறக்க சகோதரனாய் மாறிப்போனார்கள்

ஏன்டா பங்காளி கலையரசா அந்தப்புள்ள இளமதி என்னடா மதிக்கவே மாற்றா, நானும் அரை மணி நேரமா அவளையே உத்து பாத்துகிட்ருக்கேன் , ஆனா அவ கண்டுக்கவே மாட்டிக்கிறாளேடா” என்றான் உக்கிரபாண்டி

ஆனா பங்காளி அவளுக்கு என் மேல ஒரு கண்ணு இருக்குடா.அவளும் பெண்தானே அச்சம் மடம் நானம்லாம் இருக்கதானே செய்யும் மாமனகண்டு பயபுட்றாலோ” என்றான் உக்கிரபாண்டி

டேய் ராசா, குண்டே வெடிச்சாலும் அவ இந்த பக்கம் திரும்ப மாட்ட சும்மா ஏதாது ஒப்பாம பேசாத” என்றான் கலையரசன்

ஆதாரம் இல்லாமல் பேச மாட்டான் இந்த உக்கிரபாண்டி, அன்னைக்கு ஒரு நாலு அவளும் அவ ப்ரண்ட் வானதி என்ன பார்த்து சிரிச்சாடா, உடனே அவளுக காதுல எதோ குசுகுசுன்னு பேசிக்கிட்டாளுகடா”

நாட்கள் நகர்ந்தன செங்கதிர்,சிவா, தயாளன், நரேந்திரன்,கரிகாலன் என்று நட்பு வட்டாரமும் விரிந்தது. கல்லூரி வாழ்வும் இனித்தது.அதே நேரத்தில் கலையரசன் படிப்பிலும் கவனமாக இருந்தான்.நல்ல மதிப்பெண் எடுத்தான்

கலையரசா அவள் எங்க பாத்தாலும் என்னைய பாக்குற மாறியே இருக்குடா, அது என்னவோ இப்போலாம் சண்டைபடம்லாம் பாக்கவே புடிக்கல ஒன்லி ரோமன்சு மூவிதான்” என்றான் உக்கிரபாண்டி

அவகிட்ட பேசுடா பாண்டி உன் காதல சொல்லுடா”

பேசலாம் பங்காளி ஆனா கத்தி ஊர கூட்டி, தேர இழுத்து தெருவுல விட்டுட்டா என்னடா செய்ய கொஞ்சம் பயமா இருக்குடா”

நாளைக்கு காலேஜ் விட்டு போறப்போ மடக்கி பேசிரலாம்ட பாண்டி

அடுத்த நாள் கல்லூரி முடிந்து இளமதியும்,வானதியும் சென்றுக்கொண்டிருந்தார்கள் உக்கிரப்பாண்டியும்,கலையரசனும் அவர்களை பின்தொடர்ந்து பேசமுயன்றார்கள்

திடீரென கலையரசன் ஏங்க இளமதி ஒரே ஒரு நிம்சம் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்என்றான்

என்ன சொல்லுங்கஎன்றாள் இளமதி

பரீட்சை எப்படி எழுதுனிங்கஎன்றான் கலையரசன்

டேய் நான் உன்ன என்ன கேக்க சொன்னா? நீ என்னடா கேக்ற?” என்றான் உக்கிரபாண்டி

பங்காளி கொஞ்சம் பொருடா நான் கேக்குறேன்என்றான் கலையரசன்

இளமதியும், கலையரசனும் முன்னே செல்ல, வானதியும் உக்கிரபாண்டியும் பின்னே சென்றார்கள்

நான் நல்லாதாங்க எழுதுனேன் நீங்க எப்படி எழுதுனிங்க நல்லாத்தான் எழுதியிருப்பிங்க நீங்கதான் பெரிய படிப்பிஸ்டேஎன்றால் இளமதி

நல்லாத்தான் எழுதியிருக்கேங்க பாப்போம் ரிசல்ட் வரட்டும், உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் தப்ப எடுத்துகாதிங்க கோவபடாம கேப்பிங்கன்ன சொல்லுங்க நான் கேக்குறேன்என்றான் கலையரசன்

உக்கிரபாண்டி முகம் வேர்த்தது, அப்படியே ஓடிவிடலாமா என்று கலையரசனுக்கு சைகை காமித்தான்

சும்மா சொல்லுங்க எதுக்கு இவ்வளவு பில்ட்அப்என்றாள் வானதி

அதுகில்லிங்க உக்கிரபாண்டிக்கு மேல உங்களுக்கு இல்ல இல்ல உங்க மேல உக்கிரபாண்டிக்கு…” என்று இழுத்தான் கலையரசன்

ஹெலோ கலையரசன் எனக்கு அப்படிலாம் எதும் இல்ல நீங்க என்ன சொல்லவரிங்கன்னு புரிது, நீங்களா ஏதும் கற்பனை பண்ணிக்காதிங்கஎன்றால் இளமதி

கலையரசன் உக்கிரபாண்டியை பார்த்தான்.அவன் விதி என்று சைகை செய்தான்

அதுசேரி அவங்களுக்குதான் விருப்பமில்ல உங்களுக்கு ஏதாது என்மேல இருக்கா வானதிஎன்றான் உக்கிரபாண்டி

நால்வரும் வாய்விட்டு சிரித்தார்கள் நாட்கள் செல்ல செல்ல நல்ல நண்பர்களாய் மாறினார்கள்

கலையரசனும், இளமதியும் நட்பையும் கடந்து தன்னையறியாமலே பயணிக்க ஆரம்பித்தார்கள்.விடிய விடிய தொலைபேசியில் அரட்டை அடித்தார்கள், மனம்விட்டு நிறைய பேசினார்கள் ஆசைகளையும் கனவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள்

இப்படியே இரண்டு வருடம் கல்லூரி முடிந்தது. இளமதி கரூர் அருகிலிருக்கும் பொட்டல்பட்டி கிராமம்.இருவரும் கோவையிலிருந்து கரூர் வரை சேர்ந்தே பயணிப்பார்கள்,பிறகு அதே பேருந்தில் கலையரசன் திருச்சி சென்றுவிடுவான்.

ஒருநாள் பேருந்தில் இருவரும் அருகில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தார்கள்

கலை இப்படியே பஸ் நிற்காமல் போய்க்கொண்டேயிருந்தால் எப்படியிருக்கும்என்றாள் இளமதி

ஏன் இளமதி அப்படி சொல்ற இப்படி நிக்காம போனா எப்போ நாம இறங்குவோம்என்று அவளை கிண்டல் செய்தான் கலையரசன்

கலை, பஸ் நிக்காம போன நான் உன்கூடவேயிருப்பேன்ல, எனக்கு உன் கூடவே இருக்கணும். உன்கூட இருக்கறப்போ பாதுகாப்பா உணர்றேன். ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழலாமா, ஐ லவ் யூ கலைஎன்றால் இளமதி

சந்தோசம் தாங்காமல் அவள் கண்களையே பார்த்தான்.இப்படி சட்டென சொல்லி கிறங்கடித்து விட்டாலே

எனக்கு உன் மேல ஆசைதான் இளமதி உன்கூடவே இருக்கனும் இளமதி” என்று கலையரசன் தன்னை மறந்து அவள் கூரிய விழிகளை நோக்கி சொன்னான்

அவள் அவன் தோள்களில் சாய்ந்தாள்.இருவரின் மனமும் இணைந்தது.சில நொடிகள் அவள் தாயாகவும் அவன் சேயாகவும் சில நொடிகள் அவள் சேயாகவும் அவன் தாயாகவும் மாறி மாறி பூத்தார்கள் இளங்காதலர்கள்

நாட்கள் கடந்தது இருவரும் காதலையும், எதிர்கால வாழ்வையும் நெஞ்சில் சுமந்து பொறுப்பாக படித்தார்கள்.ஒரு நல்ல வேலையில் அமர்ந்தார்கள்.கல்வி கலையரசன் குடும்ப வறுமையை துடைத்தது.அவர்களின் காதலும் அடுத்த அத்தியாயம் தொடர காத்துக்கொண்டிருந்தது

கலை நம்ம காதல எங்க வீட்ல ஏத்துப்பாங்கலா, நீ நல்லவன்னு நான் எப்படிடா சொல்லி புரியவைப்பேன், அவர்கள் கேட்கும் தகுதி சாதியாச்சே, வேற எந்த தகுதினாலும் வளர்த்துகலாமே,பிறப்பால் வரதெல்லாம் ஒரு தகுதியா?”

இளமதி நம்பிக்கையா அதே நேரத்துல தைரியமா இத நாம எதிர்கொள்ளணும்.ஒன்னு நல்லா புரிஞ்சிக்க நாம எதிர்த்து போராடறது உங்க அப்பா அம்மாவ எதிர்த்து இல்ல,பல நூறு வருசமா இரத்தம் படிஞ்சி பாசான் புடிச்சி போன ஒரு பழைய மனநிலைய, சாதிங்கிற ஒரு சிந்தனைய. அந்த சாதியோட கோரமுகத்த தைரியமா எதிர்கொள்ளனும், இத எப்பவும் மனசுல வச்சிக்கோ

சரி கலை.எங்கப்பா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிடாங்க இதுகப்பறமும் சொல்லாம இழுத்தா சரியா இருக்காது கலை நான் இந்த முறை ஊருக்கு போகும்போது நம்ம லவ் விசயத்த சொல்லப்போறேன்

கவலைபடாத இளமதி எல்லாம் நல்லதே நடக்கும் தைரியமா எதிர்கொள்வோம் ஐ லவ் யூ டா நிம்மதியா இரு

கலை நான் நாளைக்கு ஊருக்கு போறேன் ஏன்னா ஆகும்னு தெரியல நான் சொன்ன பிறகு என் மொபைல பிடிங்கிட்டு வீட்லே அடைச்சி வைக்கலாம் என் அட்ரஸ் நான் மெசேஜ்ல அனுப்பிருக்கேன், நிச்சியமா நான் எதாவது ஒரு வழியில் உனக்கு பதில் அனுப்புவேன் கவலைபடாத கலை

கலையரசன் மனம் கவலையால் நிரம்பியது ஆனாலும் காதலிக்கு ஆறுதல் சொன்னான் இருவரும் கண்கள் கலங்கினர் இருவருக்கும் இருவரும் ஆறுதல் சொன்னார்கள்

அடுத்த நாள் ஊருக்கு வந்தால் இளமதி அவள் அப்பாவிடம் பேசினாள்

எம்மா இளமதி பக்கத்து ஊரு பய முத்தரசன் நம்ம சொந்தகாரன்தான் நல்ல படிச்சியிருக்கான் ஒரு லட்சம் சம்பளம், நல்ல சொத்து சொகம் நம்மல மாதிரிதான். உன் ஜாதகத்த மாப்பிள்ள வீட்ல குடுத்ருக்கேன்என்றார் இளமதி அப்பா மாறன்பூபதி

இளமதி இதைக்கேட்டு திடுகிட்டால் தயங்கி தயங்கி பயத்தோடு சொன்னாள்

அப்பா நான் ஒரு பையன விரும்புறேன் என்கூட படிச்ச பையன் நல்ல பையன்பா, நல்ல வேலைலதான் இருக்கான்பா அவனையே கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்பா

“அவன் என்ன சாதி” என்று அதட்டினார் மாறன்பூபதி

“……………………..” என்றாள் இளமதி

மாறன்பூபதிக்கு கோபம் தலைக்கேறியது பளார் என்று கன்னத்தில் விட்டார்.கோபமாய் அவர் மனைவியை கூப்பிட்டார்

ஏண்டி தேவி உன் புள்ளைய பாருடி ஒரு கீழ்சாதி பயல காதலிப்பாளாம் , நாம வாயப்பொத்திகிட்டு இவ சொல்றவனே கல்யாணம் பண்ணிவைக்கணுமாம்

அப்படியெல்லாம் இல்லங்க நம்ம சொன்னா கேப்பா நீங்க அடிக்காதிங்கஎன்றாள் தேவி

இங்கப்பாரு இளமதி இந்த காதலாம் நம்ம வீட்டுக்கு வேணாம் அந்தக் கருமத்தெல்லாம் தூக்கியெறிஞ்சிட்டு நாங்க சொல்றவன கல்யாணம் பண்ணிக்க கெட்ட பயனாலும் நம்ம சாதி பய .தங்க ஊசின்னு தொண்டைல குத்திக்க முடிமா? நல்ல பையன்னு வேற சாதி பயல கட்டிக்க முடியுமா?” என்று கண்டித்தால் தேவி

“இல்லம்மா அவன் நல்லவன்மா அவனை எனக்கு நல்ல தெரியும்மா நான் அவன் கூடத்தான் வாழ்வேன்” என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் அழுதுகொண்டே சொன்னாள்

கோபத்தில் முகம் சிவந்த மாறன்பூபதி இளமதியை எட்டி மிதித்தார்.கையில் கிடைத்த தொடப்பத்தையெடுத்து வெறித்தீர அடித்தார்.வலியில் சுருண்டால் இளமதி

“சாதில நான் உசந்த சாதிடி அந்த கீழ் சாதி பயல மாப்ளன்னு எப்படி சொல்லுவேன் ஊரே பாத்து சிரிக்க மாட்டான், இதுக்கு நான் நாண்டுகிட்டு சாகலாம்டி” என்றார் மாறன் பூபதி

“அப்பா ரெண்டு பெரும் மனுசனுங்கதான்பா பிறப்புல வரதுக்கு பேரு தகுதியோ பெருமையோ இல்லப்பா, எங்கல வாழ விடுங்கப்பா நல்ல வாழ்ந்து காமிப்போம் அதுதான்பா பெருமை” என்று கையெடுத்து கும்பிட்டால் இளமதி

பூபதி மாறனால் எதையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை கோபம் புத்தியை மறைத்தது பளார் பளாரென்று கன்னத்தில் அறைந்து இளமதியை ஒரு அறையில் பூட்டிவிட்டார்,வெளியே மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்

கலையரசன் இவளிடமிருந்து எந்ததகவலும் வராமல் துடித்துபோனான்,ஒவ்வொரு நாளும் யுகங்களாய் கழிந்தன.ஒரு நாள் கலையரசனக்கு இளமதி தொலைபேசியில் பேசினால்

“கலை என்ன கொடுமைபண்றாங்கடா முடியலடா நம்ம காதல வீட்ல சொல்லிட்டன்டா தனிமையா ஒரு ரூம்ல போட்டு சாகடிக்கிறாங்கடா நான் வீட்டவிட்டு வெளிய வந்துட்டேன் என்ன வந்து கூட்டிட்டு போடா”என்று கதறி அழுதால் இளமதி

கரூர் சென்று இளமதியை அழைத்துக்கொண்டு சென்னை சென்றான் கலையரசன் ஒரு வழக்கறிஞரை வைத்து நண்பர்கள் துணையோடு சட்டப்படி திருமணம் செய்துகொண்டார்கள். இருவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.போதுமான அளவு சம்பளம் கிடைத்தது.வாழ்வு சந்தோசமாக போனது,சில நேரங்களில் இளமதி தன் தாயையும், தன் தந்தையையும் நினைத்து அழுவாள்,கலையரசன் கட்டியணைத்து ஆறுதல் சொல்லுவான்

நாட்கள் நகர்ந்தன, நாட்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் ஓடின,இன்ப மலர்கள் இல்லறத்தில் பூத்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள் இளங்காதலர்கள்

சில வருடத்திற்கு பிறகு இளமதி தந்தை இவர்கள் வீட்டிற்கு வந்தார். இளமதி இன்முகத்தோடு வரவேற்றாள். அவளுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை

“எம்மா இளமதி நல்ல இருக்கியா. நீ இப்படி எங்கள விட்டு போனது சங்கடம்தான் இருந்தாலும் பரவால்ல, நீ சந்தோசமா இருக்கியா அது போதும் மா” என்றார் மாறன் பூபதி

“அப்பா என்னைய மன்னிச்சிருங்கபா என் கூட எப்பவும் போல நீங்க பேசனும்பா,கலைகிட்ட கேளுங்க , நான் எத்தனை முறை உங்க பாசத்துக்கு ஏங்கி அழுதுருக்கேன்னு” என்று அழுதுகொண்டே அப்பா காலடியில் வந்து அமர்ந்தாள் இளமதி

“அப்பா , அம்மா நல்ல இருக்காங்களா அவங்கள பார்க்கணும்போல இருக்குப்பா” என்றாள் இளமதி

“அவதான் உன் நினைப்புல ஒழுங்கா சாப்புடாம இலச்சிபோய் மோசமா கெடக்குறா கண்ணு, அடுத்த வாரம் நம்ம ஊரு குலசாமி கோவில் போறோம் நீங்க ரெண்டு பேரும் வாங்கம்மா, அம்மாவையும் பார்த்தமாரி இருக்கும்”என்றார் பூபதி மாறன்

இளமதிக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை, ஒருவாரம் ஒரு வருடம் போல இருந்தது எப்போது சொந்த ஊருக்கு போவோம் அம்மா அப்பாவோடு சேர்ந்து பேசி எத்தனை வருடங்கள் ஆகிறது என்று இளமதிக்கு இருப்பு கொள்ளவில்லை.கலையரசனுக்கு இளமதி இவ்வளவு சந்தோசமாய் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி,இவள் இன்முகம் இத்தனை நாள் இப்படி பளிச்சென மின்னவில்லையே நெஞ்சினில் ஒரு ஓரமாய் இந்த சொகம் அவளை வாடியுள்ளதே என்று கலையரசன் எண்ணிகொண்டான்

அடுத்த வாரமும் வந்தது, கலையரசனும் இளமதியும் பொட்டல்பட்டி கிராமத்தை அடைந்தார்கள்.அவர்களை குலசாமி கோவிலுக்கு அழைத்துசென்றார் பூபதி மாறன்

“எங்கப்பா அம்மா”

“வந்துகிட்டுருக்காமா, மாப்பிள்ளை அந்த பக்கத்ல மொண்ட கெணறு இருக்கு அதுல தண்ணி கொண்டு வந்த்ருங்க போங்க வைக்க தண்ணி வேணும்.நான் போய் பூஜா சாமான்லாம் எடுத்துவந்து ஜோடிக்கிறேன் எம்மா இளமதி நீயும் சாமிய ஜோடிக்கிறதுக்கு உதவும்மா”என்றார் பூபதி மாறன்

“சரிங்க மாமா ,இளமதி அந்த கொடத்த எடுத்து குடு” என்று சொல்லி இளமதியை பார்த்து காதலோடு சிரித்தான்,வெட்கப்பட்டு சிரித்தாள் இளமதி

“பாத்து தண்ணி மொள்ளு கலை, அந்த கிணறு வலுக்கும் மொண்டகிணறு இல்லாட்டி நானே போயிட்டு வந்த்ருவேன்” என்று சொன்னாள் இளமதி சிரித்துகொண்டும் தலையாட்டிக்கொண்டும் சென்றான் கலையரசன்

மொண்டைகிணற்றில் இறங்கி தண்ணீர் மொண்ட கலையரசன் தலையில் இடிவிழுந்தது போல ஒரு அடி விழுந்தது இரண்டு பேர் கட்டையால் அடித்து அவனை தூக்கி ஒரு முள் புதரில் வீசினார்கள்,இளமதி என்று முனகிக்கொண்டே மயக்கமடைந்தான் கலையரசன்

கருப்பு சாமியின் துறுப்பிடித்த அருவாளை தூக்கிப்பிடித்து தண்ணீர் ஊற்றி கழுவினார்கள் சந்தனமும் குங்குமமும் வைத்தார்கள் பூபதி மாறனும், இளமதி தாய் மாமன் குலசேகரனும்

இளமதி கண்மூடி குலசாமியை வேண்டிகொண்டிருந்தாள், குலசேகரன் , இளமதி தலையில் ஓங்கி அடித்தான் அவள் மயக்கத்தில் விழுந்தால் கலையரசன் சென்ற திசையில் கையை ஆட்டினால்

“இந்த ஈனமுண்ட நம்ம சாதி மானத்தையே வாங்கிட்டா இவ இரத்ததில சாக்கடை கலந்துருச்சிடா, இவள கருப்புக்கு பலிக்கொடுத்து நம்ம சாதி மேல விழுந்த கரைய இவ இரத்தத்திலே கழுவனுமுடா”என்று வெறிகொண்டு கத்தினான் குலசேகரன்,கொடுவாளை ஓங்கி இளமதி கழுத்தில் போட்டான் தலை தனியே பிரிந்து விழுந்தது, உடல் மட்டும் துடித்தது,பூபதி மாறன் கதறி கத்தினான் அழுதான்.

இளமதி உடலை தூக்கிக்கொண்டுபோய் ஓடை ஓரமாக குழிதோண்டி புதைத்தார்கள்,சாதிவெறியில் இரத்தம்சொட்டும் அருவாளை தூக்கிகொண்டு குதித்தார்கள் குலசேகரனும் அவன் கூட்டாளிகளும்.இளமதி உடலை மிதித்தார்கள், உதைத்தார்கள்.மாறன் பூபதி உடலை பிரிந்து கிடந்த தலையை கட்டிக்கொண்டு அழுதான் கத்தினான் உருண்டான்.குலசேகரன், பூபதி மாறனை இழுத்துக்கொண்டு ஊர்நோக்கி சென்றான்

மயக்கம் தெளிந்த கலையரசன் தத்தி தத்தி கருப்பு கோவில் அருகே வந்து “இளமதி…. ,இளமதி……” என்று கத்தினான்

இரத்தம் சொட்டிய திசையில் சென்று பார்த்தான் அங்கே இளமதி புதைக்கபட்டிருந்தால், தலையில் அடித்துக்கொண்டு அழுதான்

“இளமதி எந்திரி எந்திரி ஊருக்கு போலாம் நாம வாழனும்டி” என்று கத்தி அழுதான்

“என் சாமிய கொன்னுட்டானுங்கலே….”என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினான்

அந்த இளங்காதலனின் கதறல் பொட்டல் காட்டு பாறையில்பட்டு எதிரொலித்தது.கதறலை கேட்டுக்கொண்டு கம்பீரமாய் அரிவாளோடு நின்றுகொண்டிருந்தது கருப்பு சாமி.

கடந்த மூன்று வருடங்களில் மட்டும் தமிழகத்தில் என்பத்தியொரு ஆணவகொலைகள் நடந்துள்ளது. ஆணவகொலைக்கு எதிராக கடுமையான சட்டமும், மக்களிடம் விழிப்புணர்வும் வேண்டும் என்பதுதான் இளமதி போன்ற ஆன்மாக்களின் ஒற்றை கோரிக்கை

13010373403_4c135e5687_b

 

நான் மாடு பேசுகிறேன்

நான் மாடு பேசுகிறேன், உணர்வற்ற உடலென, கருணையற்று கடைநிலை அடிமையாய் நடத்தும் மனிதர்களிடம் கண்ணீரோடு பேசுகிறேன்.எங்கள் வாழ்வு நிலைமை இரண்டையும் பேசுகிறேன் கேள்

ஒரே ஒரு ஆள் மட்டும் நிற்கும் இடத்தில் மூன்று நான்கு பேரை நிற்க வைத்து சிறை வைத்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும் அப்படிதானே எங்களை வண்டிகளில் ஏற்றி செல்கிறாய்.அடிமைகளை கப்பல்களில் ஆப்ரிக்காவிலிருந்து இப்படிதான் ஏற்றி சென்றார்கள். அவர்கள் துயரைச் சொல்லி போராட ஆப்ரகாம் லிங்கனும்,மால்கம் எக்ஸ்ம்,மார்டின் லூதர் கிங்கும் இருந்தார்கள்.எங்களுக்கு யார் கிடைப்பார்கள் யார் இருக்கிறார்கள்

உனக்கு ஆண் குழந்தை பிறந்தால் மட்டும் கொண்டாடும் நீ.எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் மட்டும் கசாப்பு கடைக்கு அனுப்பிவிடுகிறாய்.இயற்கை எங்களுக்கு கொடுத்த உடலுறவுசுகத்தையும் சிதைத்து ஏதோ ஊசி போடுகிறாய்.எங்கள் உடலையே வணிக லாபத்திற்காக வளைத்து மாற்றி விட்டாயே.இதெல்லாம் உன் சந்ததிக்கு இயற்கை கடத்தாமல் விட்டுவிடுமா?

இந்த உலகில் வாழ்த்த எத்தனையோ பெரிய பெரிய பாலூட்டிகளையெல்லாம் அழித்துவிட்டாய் .அந்த வகையில் எங்களின் மரபணுவை பாரில்பரப்பி பரவி வாழும் உயிர்வாழ் போராட்டத்தில் வென்று விட்டோம்தான். ஆனால் வாழ்ந்து, அடிமையாக வாழ்ந்து என்ன பயன்

நாங்கள் புலி, சிங்கத்திடமும் சிக்கித்தவித்தோம்தான். ஆனால் இப்படி அடிமை வாழ்வு வாழ்ந்து வதைக்கப்படவில்லை.உணவு சங்கிலியில் இடையில் இருந்தவன் சரசரவென்று முதலில் சென்றுவிட்டாய்.அதுதான் அதேதான் பிரச்சனையே.நீ சென்ற வேகத்தில் எங்களை தற்காத்து உயிர்வாழும் சக்தியை பரிணாம வளர்ச்சி எங்களுக்கு தரவில்லை. பல நூறு வருட பரிணாமவளர்ச்சியில் சிங்கம்,புலியிடமிருந்து தப்பிக்க எங்களுக்கு இயற்கை வலிமை தந்தது, ஆனால் நீ உணவு சங்கிலியில் உச்சம் தொட்ட வேகம் அசுரத்தனமானது.அதனால்தான் இயற்கை தடுமாறுகிறது

இந்த உலகில் உன்னை விட எண்ணிக்கையில் பல மடங்கு அதாவது இருபத்திநான்கு பில்லியன் எண்ணிகையோடு உலகில் அதிகம் வாழும் பறவையான கோழியால் உன்னை எதிர்த்து சுதந்திரமாக வாழமுடிந்ததா இல்லையே.அந்தக் கோழிகளுக்கு நீ செய்யும் தொல்லை எங்களை விட பலமடங்கு அதிகம், கண்ட கண்ட ஊசிகளை போட்டு தேவையற்ற ஹோர்மோன்களைச் சீண்டிவிடுகிறாய்.நிச்சயம் நீ விதைத்தை நீயே அறுக்கபோகிறாய் இல்லை, இல்லை நீ விதைத்தது உன்னை அறுக்கப்போகிறது

எப்படியோ நிலத்திலிருக்கும் பெரிய பாலூட்டி விலங்குகளையெல்லாம் அழித்துவிட்டு இப்போது ஜெட் வேகத்தில் பல தடைகள் கடந்து பல ஆயிரம் காலம் கடந்த கடல் வாழ் உயிரை கொன்று குவிக்கிறாய்

பல வருடமாய் தலைமுறை தலைமுறையாய் எதிர்ப்புகொண்ட,முரண்டுபிடிக்கும் மாடுகளையெல்லாம் வதைத்து வெட்டி எதிர்ப்பு குணத்தையே மழுங்கடித்துவிட்டாய். இப்படி உணர்வால் மழுங்கடிக்கப்பட்ட உயிர்கள் அடுத்த தலைமுறைக்கும் இப்படிப்பட்ட குணத்தைதானே மரபணுக்களில் பதிந்து கடத்தும், அப்படிக் கடத்தப்பட்ட உயிர்களை உன்குழந்தைகள் சாப்பிடும்போது உன் குழந்தை மட்டும் வீரியத்தோடு இருக்குமா என்ன

உணவுச்சங்கிலியில் அனைவரும்தான் மாட்டிவுள்ளோம் மானைகொல்லும்போது புலியிடம் தர்மம் பேசமுடியாதுதான்.அனால் நீ எங்களை கொல்வது மட்டுமில்லை வதைத்து இயற்கையின் விதியை சீண்டி கொல்கிறாய்.ஏதோ என் வாதம் இந்திய இந்துத்துவவாதிகளின் பசுபாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவுகொடுப்பது போல் இருக்கலாம்.உண்மை அதுவல்ல அவர்களுக்கு இந்தியாவில் அடித்தட்டு மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில்தான் பிரச்சனை. வெளிநாடுகளுக்கு லட்சக்கணக்கில் மாட்டை வெட்டி அனுப்புவதில் பிரச்சனையில்லைநான் சொல்வதுஎன்னவென்றால் உயிர்களை உணவுக்காக கொல்வது தவிர்க்கஇயலாதுதான்.ஆனால் அவை இயற்கையான முறையில் வளரவேண்டும் வதைத்து வளரக்கூடாது.மரபணு மாற்றி வணிகலாபத்திற்காக இயற்கையை பகைத்துக்கொள்ளகூடாது

நீ பணம் கரைக்கிறாய் பால் கறக்கவில்லை உன் ஆசைத்தீரப்போவதில்லை.யே கடைநிலை பரிணாமமே நீ தரும் அளவிற்கு இயற்கையை தலைவலியில் வேறு எந்த உயிரும் துடிக்க வைத்து சுகம் காண்பதில்லை, இங்கு இருக்கும் நீரும், காற்றும் பூமியை கடந்து எங்கும் செல்வதில்லை மறுபடி மறுபடி இங்கேதான் சுழற்கிறது. இதுதான் இயற்கையின் விதி.நீ இயற்கையை அழிக்கிறாய்.உன் வேலையை முடி அது வேலையை அது தொடங்கும் வாழ்த்துகளோடு சக உயிர்கள்

images

எங்களுக்கு என்ன வேண்டும்?

ஆளும் அரசனோ, அரக்கனோ உன் நாட்டின் உயிராகிய, மனித குரங்காகிய எங்களின் குரலுக்கு ஒரு நிமிடம் செவிக்கொடேன்.

எங்களுக்கு மகத்தான திட்டமோ, மனம்மகிழும் சட்டமோ வேண்டாம். எட்டுவழிச்சாலை, மீத்தேன், நியூற்றினோ என்று எங்கள் நிலங்களை,எங்களை மிதித்து பிடுங்காமல் இருந்தால் போதும்.

எங்களுக்கு குளிருந்து பேருந்தோ, மின்னல் வேக பயணமோ வேண்டாம் உதிரிகள் உளுத்துப்போய், உடைந்துபோகாத பேருந்துகளும்,பள்ளம் பதம் பார்க்காத, நலமான சாலைகளும் போதும்

எங்களுக்கு கடல்நீரை குடிநீராய் மாற்றும் திட்டமெல்லாம் வேண்டாம்.  கழிவுகள் ஆற்றில் கலந்து, எங்கள் இரத்தத்தில் வளர்ந்து, உயிரைத்திங்காமல் இருந்தால் போதும்.

எங்களுக்கு அரசு, டாஸ்மாக்கில் ஊத்திகொடுத்து, குடிமகனை நோய்க்கு கூட்டிக்கொடுத்து,  கொண்ட பணத்தில் மானியமோ, திட்டமோ வேண்டாம்    வரி என்று பெயர் சூட்டி, வாழவழியற்ற எங்கள் வயிற்றில் மிதித்து, பணம்  பிடுங்கி, கொலுத்து செழிக்காமல் இருந்தால் போதும்

எங்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் வேண்டாம், இலவச நேப்கின்களும், சுத்தமான கழிவறைகள் கொண்ட பள்ளிகள்தான் வேண்டும்.

எங்களுக்கு கம்ப்யூட்டரில் பாடம் நடத்த வேண்டாம், பாடத்திற்கொரு ஆசிரியரோடு தரமான கல்விதான் வேண்டும்

தொன்னூறு சதவீத வளத்தை பதுக்கும் பணக்கார வர்க்கத்திற்கு குறைந்த விலை நீர்,நிலம் கொடுக்கும் தர்ம அரசே, எங்களுக்கு பணக்கார இந்தியா வேண்டாம். மாறாக மானிய விலை ரேசன் பொருளும், மின்சாரமும், தனியார்மயமாக்கபடா நீரும் வேண்டும் சுருங்க சொன்னால் எங்களுக்கு, அதாவது இந்தியாவிற்கு உயிர் வேண்டும்

எங்களுக்கு பலகோடி செலவிட்டு, பல ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்த புல்லெட் ரயில் திட்டங்கள் வேண்டாம். எப்போதும் மருத்துவர்களும், மருந்துகளும், அக்சிஜென் சிலிண்டர்கள் உள்ள அரசு மருத்துவமனை வேண்டும்

இத்தனை வேண்டி உன்னால் எதுவுமே தரமுடியவில்லையென்றாலும் பரவாயில்லை, குறைந்தது எங்களுக்கு மரியாதையாவது வேண்டும் ஏனென்றால் இது மக்களாட்சி

drought-india-story_647_090915032013