ஹொய்சாளா மண்ணில்…..

விடியற்காலை 4.௦௦ மணிக்கு மைசூரில் இருந்து பேலூர் பேருந்து ஏறினோம்.காலை6.௦௦ மணிக்கு மேல் இருட்டு திரை விலகியது.  முதல்முறை கர்நாடக கிராமப்புறங்களை பார்க்கிறேன்.எதோ எனக்கு சிறகு முளைத்து பறக்கும் உணர்வு யார் பேசும் வார்த்தையும் புரியவில்லை வெறும் 3௦௦கிமீ தொலைவில் மொழி,கலாச்சாரம் என அனைத்துமே மாறிவிட்டதே இதுதான் நமது இந்தியா.

சிவப்பு கம்பளம் விரித்தது போல எங்கும் செம்மண் வயல்கள் ,எளிமையான மக்கள்,விவசாயம் செழித்த பூமி,மண்ணின் வளத்தை காட்டும் செழிப்பான மரங்கள், செம்மண்ணில் சுவர் எழுப்பி கட்டிய பெரிய பெரிய ஓட்டு வீடுகள் இவையே கர்நாடகாவின் தனித்துவம் என்று நினைகிறேன்.

தமிழகத்தை விட கர்நாடகம் நகரமயமாதலின் விகிதாசார அளவு குறைவுதான்,அதனால்தான் அவர்கள் இயற்கையோடு நம்மை விட நெருக்கமாக உள்ளார்கள் போல.மரங்களாக பிறந்தாலும் இந்த காவேரி ஓரத்தில் பிறக்க வேண்டும் வயித்துக்கு வஞ்சகம் செய்யமாட்டாள் காவேரி அன்னை.

இந்த கோடை காலத்திலும் செழிப்பு குறையாத கிருஷ்ணராஜா நகர் நம்மை பொறாமை கொள்ளவைக்கிறது.இதையெல்லாம் பார்த்துகொண்டே ஹோய்சாலர்களின் கைவண்ணம் காண பேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

ஹோய்சாளர்கள்:  

இன்றைய கர்நாடக நிலபரப்பை 10-14 ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டவர்கள்.இவர்களின் பூர்வீகம் கர்நாடகத்தின் மலை நாடு.12 ம் நூற்றாண்டு வரை மேற்கு சாளுக்கியர் என்னும் கல்யாணி சாளுக்கியர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்துள்ளனர்.பிறகு தங்களை சுதந்திர நாடாக மாற்றி கொண்டுள்ளனர்.

(ஹோய்சாளர்களின் சின்னம் )

ஹோய்சாளர்களின் கட்டிடகலை:

இந்தியாவில் உள்ள இந்துக் கோவில்கள் பொதுவாக மூன்று வகையான கட்டிடகலையை அடிப்படையாக கொண்டது

  1. 1)      நாகரா கட்டிடகலை
  2. 2)      திராவிட கட்டிடகலை
  3. 3)      வேசர கட்டிடகலை

வேசர கட்டிடகலை நாகரா மற்றும் திராவிட கட்டிடகலையின் பிள்ளை எனலாம். ஹோய்சாளர்கள் வேசர கட்டிடகலையின் குருக்கள்.

பேலூர் கோவில்

பேலூர் சென்னக்கேசவா கோவிலை பார்த்த பிறகு எனக்கு தோன்றிய முதல் விஷயம் ஹொய்சாளர்கள் எதில் சாதித்தார்களோ இல்லையோ ஆனால் நிச்சயமாக கட்டிடக்கலையில் சாதித்துள்ளனர். திருடனுக்கு அலிபாபா குகையில் நிரம்பியிருக்கும் தங்கம் போல சிற்ப ரசிகனுக்கு கோவில் முழுக்க சிற்பங்கள்.எங்கு நோக்கினும் சிலை. சிலை என்றால் சாதாரணமான சிலை இல்லை உற்று நோக்கினால் அனைத்து சிலையிலும் உயிர் இருக்கும். சிற்பியின் பொறுமையும் திறமையையும் ஒவ்வொரு சிற்பத்திலும் தெரிகிறது

ஹொய்சாளர்கள் கோவிலில் என்னை மூன்று விஷயங்கள் வியக்க வைத்தது. ஒன்று கோவிலை சுற்றி தாழ்வாரத்தின் கீழ் வைக்கபட்டுள்ள மதானிக்க சிலைகள், ஒவ்வொரு மதானிக்க சிலைகளும் நிச்சயம் உயிருள்ள பெண்தான்.சிலையின் மூக்கும் கண்ணும் நம் மனதை நான் உயிருள்ள பெண்தான் என நம்ப வைத்துவிடுகிறது. ஹொய்சாளா சிற்பிகளின் தாராள மனசை மதானிக்கா சிலைகளில் அணிவித்திருக்கும் ஆபரணங்களில் காணலாம்.நுணுக்கமான வேலைபாடுகளில் ஹொய்சாளா சிற்பிகள் சிறந்தவர்கள். அந்த நுணுக்கமான வேலைப்பாடுகளே அவர்களின் கட்டிடக்கலையை தனித்துவம் கொண்டதாக மாற்றிவிடுகிறது

ஒவ்வொரு சிற்பமும் கோவம், பெருமை, மகிழ்ச்சி, துக்கம், அன்பு என எத்தனையோ உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மதானிக்க சிற்பங்கள் மிகவும் அபாயகரமானவை அதன் உதடுகளும், கண்களும், இடையும், விரல்களும் நம் மனதை ஒரு நிமிடம் சஞ்சலம் அடைய செய்துவிடும்.இதுதான் சிற்பியின் வெற்றி. ஒவ்வொரு சிற்பத்திற்கு பின் இருக்கும் பூ வேலைபாடுகள் நுணுக்கம் குடியிருக்கும் வீடுகள். மொத்தம் 42 மதானிக்கா சிற்பங்கள் உள்ளன. அதில் 38 கோவிலுக்கு வெளியிலும், 4 கோவிலுக்கு உள்புறமும் உள்ளன

அடுத்ததாக என்னை பித்து கொள்ள வைத்தவை தூண்கள். என்னடா இது தூன்தானே என்று நினைத்து விடாதீர்கள். ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் அவை தூண்கள் அல்ல, எப்போதும் அதீதவேகத்தில் சுற்றிகொண்டே இருக்கும் சக்கரங்கள். இந்த சிற்பங்கள் அனைத்தும் மாக்கல் என்னும் ஒரு வகை கல்லால் கட்டப்பட்டவை.  இந்த தூண்களை அமில நீரில் ஊறவைத்த பிறகு அதனை உருட்டி உருட்டி உளியை கொண்டு கூர்மையான சக்கரம், பட்டையான சக்கர வடிவங்களில் கொண்டு வருகின்றனர். இந்த தூண்கள் சாளுக்கிய தூண்களிலிருந்து ஹொய்சாளா  சிற்பங்களின் கைகளினால் பரிணாமம் அடைந்திருக்கிறது. இந்த வகை தூண்கள் ஹொய்சாளர்கள் கட்டிய அனைத்து கோயில்களிலும் உள்ளன

மூன்றாவது விஷயம் குவை மாடங்கள். இதை பார்த்த பிறகு எனக்கு தோன்றிய முதல் விஷயம் ஹொய்சாளர்கள் சிறந்த பொறியாளர்கள், கணித மேதைகள். குவை மாடம் என்பது கோவில் மண்டபத்தின் உள்ளே சென்று அண்ணாந்து பார்த்தால் அழகான கல் மலரை கவிழ்த்து வைத்தது போல இருக்கும். குவைமாடங்களை அவ்வளவு எளிதாக என்னால் வர்ணிக்க முடியவில்லை. ஆனால் ஒன்று அந்த குவைமாடங்களை நின்று ரசிப்பதை விட படுத்துக்கொண்டே ஒரு நாள் முழுவதும் கூட பார்த்துகொண்டே இருக்கலாம்

ஹளபேடு :

ஹளபேடு பேலூரிலிருந்து 22 கீமீ தொலைவில் உள்ளது. ஹொய்சாளர்கள் பேலூரிலிருந்து தங்களது தலைநகரத்தை ஹளபேடுவிற்கு ஒரு சமயத்தில் மாற்றினார்கள். ஹளபேடு என்றால் பழைய அல்லது புதைந்த நகரம் என்று பொருள். இதன் பழைய பெயர் துவாரக சமுத்திரம். இந்த கோவிலும் பேலூர் கோவிலுக்கு சளைத்தது அல்ல. இரண்டு நந்திகளும் இந்த கோவிலின் அழகை இன்னும் கூட்டியது. இந்த கோவில் இஸ்லாமியர் படையெடுப்புகளால் இருமுறை அழிந்ததாக கூறப்படுகிறது. நமது சிற்பபொக்கிஷம் இருமுறை அழிந்தது என்பது நிச்சயம் கஷ்டமான ஒன்று

பெலவாடி

பெலவாடி ஹளபேடுவில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. கி.பி1200 ல் ஹொய்சாளா மன்னர் இரண்டாம் வீர வல்லாளர் ஆட்சி காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரது மகன் காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீர நாராயணன் ஆலயம் பேலூர், ஹளபேடு ஆலயத்திற்கு பிறகு பெரிய ஹொய்சாளா  ஆலயம். இதன் சிறப்பே முகப்பு மண்டபமும், தூண்கள்தான். இங்கே அழகான கிருஷ்ணர் சிலை உள்ளது. நான் பார்த்த அழகான சிலைகளில் இதுவும் ஒன்று. பிறகு ஜவகல், அரிசிக்கரே, கோரவங்கல கோவில்களை பார்த்துவிட்டு திரும்பினோம். இந்த வரலாற்று சின்னங்கள் நம்மை கைபிடித்து காலத்தின் பின்நோக்கி இழுத்துச்செல்லக்கூடிய அதிசயங்கள். முன்னோர்களின் நினைவுகளாக, வரலாற்றின் சாட்சியங்களாக இவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழியனுப்பி வைப்பது நமது கடமை

2 thoughts on “ஹொய்சாளா மண்ணில்…..

  1. ஹொய்சாள அரசர்கள்
    1 இரண்டாம் விக்ரமாதித்தன்
    2 முதலாம்பல்லாளன்
    3 விஷ்ணு வர்தனர்
    4 இரண்டாம் பல்லான்
    5 இரண்டாம் நாரசிம்மன்
    6 சோமேஸ்வரன்
    7 மூன்றாம் வீரவல்லாள தேவன்
    1047_1100 கி.பி .1343.ஹொய்சாளர்
    நாடுவிஜய நகரப் பேரரசுடன்இணைக்கபட்டது.

    Like

  2. Gowsalar = கோசாளர்கள்.ஆயர்குலத்திலிருந்து உருவானவர்கள்.கோ என்றால் பசு ஆகையால் கோ வை பாதுகாத்து வாழ்ந்த மக்கள் பொற்காலம் தில் கட்டி கலையில் சிறந்தவர்களாக விளங்கினர்.

    Like

Leave a comment