பழைய மாணவன்



கல்லூரி வாயிலில் எப்போதும் நுழையும் அதே வேகத்தோடு நுழைந்தேன் காவலாளி எப்போதும் யார் என்று கேட்டதில்லை ஆனால் அன்று கேட்டார் அப்போது தான் புரிந்தது நான் பழைய மாணவன் என்று

விவரம் சொன்னேன் கதவு திறக்கப்பட்டது நடந்து செல்லும் வழியெங்கும் புதுப்புது மாணவர்கள் ஏனோ தனித்துவிடப்பட்ட உணர்வு. எங்கே எனக்குத் தெரிந்த முகங்கள்? எங்கிருந்தோ வந்து எங்கோ சிதறிவிட்டதோ

கல்லூரியின் முதல் நாள் ஞாபகம் வந்தது எப்படி மறக்க முடியும் அந்த நாளை? கல்லூரியின் கடைசி நாள்தான் ஞாபகம் இல்லை. யாருக்கு தான் கல்லூரி முடிந்துவிட்டது என்று நம்ப முடியும்? ஏன் நம்ப வேண்டும்?

அந்த அழகான நாட்கள் கனவிலும், நினைவுகளிலும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிறகு எப்படி கடைசி நாள் என்று ஒரு நாளை சொல்ல முடியும்?

விடுதியில் முதல் நாள், தந்தை விடுதியில் விட்டுவிட்டு கொஞ்ச தூரம் சென்று திரும்பி வந்தார் மனமில்லாமல் மறுமுறை ஒருமுறை கையசைத்து சென்றார். மகனை தனியே விட்டுச் செல்கிறோம் என்ற கவலை கொண்டு இருப்பார், ஆனால் நிச்சயம் பயம் கொண்டிருக்க மாட்டார். புது நட்புகளுடன் மகன் ஐக்கியமானது கண்டு மகிழ்வோடு தான் சென்றிருப்பார்

கல்லூரியின் முதல் நாள் என்னை சுற்றி புதுமுகங்கள். மெல்ல, மெல்ல நாட்கள் நகர அந்த புதுமுகங்கள் நண்பர்களாகவும், பொது முகங்களாகவும் மாறின. ஒரு நெருங்கிய நண்பர்கள் வட்டம், அந்த வட்டத்தை சுற்றி நான் அல்லது என்னை சுற்றி அந்த வட்டம்

பேசினோம், சிரித்தோம். கலகலப்புக்கு பஞ்சம் இல்லை, கவலை எங்களை நெருங்க விரும்பவில்லை. பேசி, பேசி பொழுதை கழித்தோம். புதுப்புது நாட்களும் பிறந்தது, பேசவும் நிறைய இருந்தது

வயதுக்கேற்ற பொலிவு, எதிர் பாலினத்தின் மீதான ஈர்ப்பு, இளமையோடு துணிச்சல், பொங்கும் ஆர்வம், எதிர்காலத்தின் மீதான கனவு எல்லாம் எங்களை மாய அமுதத்தில் மூழ்க வைத்து, தித்திப்பில் திளைக்க வைத்திருந்தது. ஆசையோடு அனுபவித்தோம்

தோழி ஒருவள் வந்தாள், புது தோழமை ஒன்று தந்தாள். நண்பர்களை விட்டு நகர்ந்து என் நாளெல்லாம் அவளோடு பேசி மகிழ்ந்தேன். பார்த்ததும் வராத காதல், பழகியதும் வந்தது. இனிமை இன்னும் கூடியது. இதயம் அவளோடே வாழ்ந்தது

புது சுதந்திரம், புது காற்று, புது இறக்கை திக்கு திசை அற்று பறந்தேன். பறந்ததில் பரிட்சையை மறந்தேன், பார்டர் தாண்டி கேரளாவில் படம் பார்த்தேன், விளைவு ஐந்தோடு ஆறாவது அரியர்

வீடு என்னும் கூட்டில் அடைந்து கிடந்த எனக்கு திடீரென்று புது சுதந்திரம். கேட்க ஆளில்லை, கேட்டாலும் அடங்கவில்லை. கட்டுப்பாடற்ற சுதந்திரம் மெல்ல வாழ்வை அரிக்க ஆரம்பித்தது. நெருப்பை கூட கட்டுப்படுத்தினால்தான் வண்டி ஓடும். இளங்கன்று பயமறியாது உண்மைதான். பயமும் அறியவில்லை, சிந்தித்தும் தெளியவில்லை

வருடங்கள் ஓடி நான்காவது வருடம் வந்து சேர்ந்தது. அழகாய் சென்ற கல்லூரி பக்கங்கள் முடிவுரையை நோக்கி செல்வதை, மனம் புரிந்து கொண்டது

மனம் புரிந்து கொண்ட நேரம், தோளில் ஆறு அரியர் தாள்கள், காதல் எனும் பொறுப்பு, பெற்றோர்களின் கனவு என்ன செய்வது? காலம் கடந்த ஞானம். களத்தூர் சென்று கழுதை மேய்ப்பதா? பட்டம் பெற்று வேலைக்கு போவதா?

சந்தேகமே இல்லை பட்டம் பெற்றே தீர வேண்டும். எப்படி அரியர் என்னும் அரக்கனை வீழ்த்துவது? அதுவும் ஆறாவது அரியர் மிக நெருக்கம், என்னை விட்டு செல்ல அதற்கும் மனம் இல்லை, வைத்துக்கொள்ள எனக்கும் விருப்பமில்லை. மூன்று முறை முயன்று நான்காவது முறை வீழ்த்தினேன்

வேகமாய் வேலைக்கு தயாரானேன், வேலை ஒன்றும் கிடைத்தது. எல்லாம் முடிந்தது என்ற மகிழ்வில் திரும்பிப் பார்த்தேன், கல்லூரி வாழ்வு முடிந்துவிட்டது என்ற கசப்பான உண்மையும் புரிந்தது.

என் தோழி இன்று துணைவியாய் மாறிவிட்டாள், நட்புகள் இன்றும் தொடர்கின்றன. வசந்தத்திற்கு குறைவில்லை. இவர்களைத் தந்த கல்லூரி, என் மனதை விட்டு நீங்கவும் போவதில்லை.

வாழ்க்கையின் ஓட்டத்தில் நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன் எப்போதெல்லாம் இந்த கல்லூரிக்கு வருகிறேனோ அப்போதெல்லாம் அந்த ஓட்டத்தை நிறுத்தி, சில நிமிடங்களாவது அந்த கனவு வாழ்வில் கலக்க முயற்சிக்கிறேன். ஆனால் கனவு என்றால் கலைந்து தானே ஆகவேண்டும், காலம் என்றால் கடந்து தானே ஆக வேண்டும்

என் கல்லூரி இப்போது என் காதோடு ஒரு ரகசியம் சொல்கிறது அது என்ன தெரியுமா? “அன்பு மாணவா, நான் இங்கே தான் இருப்பேன். உன் கல்லூரி நினைவுகளை என் கருவறையில் சேமித்து வைத்து இருப்பேன். போ உன் வாழ்வை வாழ். எப்போதெல்லாம் வாழ்க்கை கோரமுகம் காட்டுகிறதோ,வாழ்வின் வெப்பம் தாங்காமல் மனம் துவண்டு போகிறதோ, அப்போதெல்லாம் ஓடோடி வா, அழகான அந்த நினைவுகளை உன் நெஞ்சில் கலக்கிறேன் இதயம் இதமாகும், வாழ்க்கை சுகமாகும்.” என்பதுதான்




2 thoughts on “பழைய மாணவன்

Leave a comment